குறவன்

கல்வியாண்டின்
இறுதியில் நடக்கும்
ஆண்டு விழாவின்
மாறுவேடப் போட்டி வரை
காத்திருக்க வேண்டியிருக்கிறது..!
ஒரு குறவனின் மகனோ
ஒரு குறத்தியின் மகளோ
மழலையர் பள்ளியில்
நுழைவதற்கு..!
எல்லா அரசியல் கட்சிகளின்
போராட்டங்களும்
பேருந்து நிலையங்களின்
அருகிலேயே நடத்தப்பட்டாலும்
எந்த அரசியல் கட்சிகளும்
பேருந்து நிலையங்களிலேயே
வாழ்க்கை நடத்தும்
குறவர் இன மக்களை
மட்டும்
கண்டுகொள்வதேயில்லை..!

ஆறுபடை வீடுகள் கொண்ட
முருகனுக்கு
பெண் கொடுத்த குலம்
ஒரு வீட்டுக்குக் கூட வழியின்றி
இன்றும் சாலைகளில்தான்
படுத்துறங்குகிறது..!
கோயிலுக்கு உள்ளே
வள்ளி அலங்கரிக்கப்படும்போது
கோயிலுக்கு வெளியே
வள்ளியின் தாய்
பேன் சீப்பு விற்றுக்கொண்டிருக்கிறாள்..!
நாம்
சாலைகளைக் கடந்து
வீட்டுக்கு போகும் போது
இவர்கள்
வீடுகளைக் கடந்து
சாலைக்கு செல்கிறார்கள்..!
வசிப்பது
பேருந்து நிலையத்திலேயே
என்றாலும்
இவர்கள் பயணிக்க ஏறினால் மட்டும்
இன்றும் பார்க்க முடிகிறது..!
பேருந்தின் நடத்துனர்கள்
ஏதாவது காரணங்களைச் சொல்லி
இவர்களை இறக்கிவிட
காட்டும் முனைப்பை..!


யாராவது நம்மில்
இருப்பீர்களேயானால்
அவர்கள் பேசுகிற மொழியில்
ஏதாவது ஒரு ஒற்றைச் சொல்லுக்கு
அர்த்தம் சொல்லிவிட்டு
பிறகு சொல்லுங்கள்..!
நான் சாதிப் பார்க்காமல்
எல்லோரிடமும்
சரிசமமாய் பழகுபவன்
என்று..!

ஆசைப்பட்டது
கிடைக்காதது குறித்தெல்லாம்
இவர்கள்
வருத்தப்படுவதேயில்லை..!
ஏனெனில்
ஆசைப்படுகிற உரிமை
தங்களுக்கு இருப்பதாக
அவர்கள் என்றும் நினைத்ததேயில்லை..!
பிறந்த நாட்களும்
திவசங்களுமற்ற
குறவனொருவனின்
மாறாத நடையிலும்
வெற்றிலைக்கு வாய்கொடுத்து
முதுகில் கட்டப்பட்ட
தொட்டில் வழி
குழந்தைக்கு மார் கொடுத்து
ஊசிமணியும், பாசிமணியும்
உருவாக
கைகள் கொடுத்துக்கொண்டிருக்கும்
குறப்பெண்னொருவளின்
துளாவாத வழியிலும்
இருக்கிறது
உறவுகளைப் பிரியாமலே
துறவு கொள்ள வழிகாட்டும்
புத்தன் உட்பட
அனைவருமே படித்தறிய வேண்டிய
ஒரு புத்தகம்..!

கன்னம்